01.015 திருநெய்த்தானம் | மையாடிய கண்டன்மலை மலைமகள் பாகமது உடையான் | திருஞானசம்பந்தர் தேவாரம்
#PanniruThirumurai | #SriNeyyadiyapparTemple | #ThiruNeithanam
திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தான தலங்களில் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம்.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நெய்யாடியப்பர்
இறைவியார் திருப்பெயர் : பாலாம்பிகை
திருமுறை : முதல் திருமுறை
பதிகம் எண் : 015 பாடல் எண் : 01
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார்
பெரும்புலியூர் முதலிய தலங்களை வணங்கிப் பிள்ளையார் வீற்றிருக்கும் காலத்தில், மேற்குத் திசைத் தலங்களையும் வணங்கத் திருவுள்ளம் கொண்டு விடைபெற்றுத் திருவருட் குறிப்பின் வழியே செல்லுகின்றார்கள். திருநெய்த்தானத்தை அடைந்தார்கள். மனம் பொருந்த வணங்கினார்கள். "மையாடிய கண்டன்" என்னும் இப்பதிகத்தைப் பாடினார்கள். இதில் "நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானம் என்னுங்கள், செல்வன் அடி, சிவகதி சேரலாம்" என்று ஆணை வழங்குகிறார்கள்.
மையாடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான்
கையாடிய கேடில் கரி உரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே. ..... (01)
பொருளுரை : கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலைமகளாகிய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ்பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக.
ஆலய முகவரி : அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில், தில்லைஸ்தானம் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 613 203.
எப்படிப் போவது : திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே சுமார் 1.5 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Ещё видео!