#EmilJebasingSong #MissionSong #VishwaVaniSongs
காலத்தால் அழியாத மிஷனரி தரிசன பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
எமில் ஜெபசிங் 1940-2013
எமில் ஜெபசிங் அவர்கள் 1940 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணவிளை என்ற கிராமத்தில் குருவானவராக பணியாற்றிய நவமணி மற்றும் கிரேஸ் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.
எமில் ஜெபசிங் அவர்களின் 17 ம் வயதில் சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த திரு P. சாமுவேல் மற்றும் ஜீவானந்தம் அவர்கள் மூலமாய் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தேவ இராஜ்ஜியத்தை கட்ட தன்னை அற்பணித்தார்.
வாலிப வயதில் விடுமுறை வேதாகம பள்ளியில் (VBS) அதிக ஈடுபாடு கொண்டு சிறுபிள்ளைகளுக்கு நற்செய்தி பணி செய்ய ஆரம்பித்தார்.
எமில் ஜெபசிங் அவர்கள் தன்னுடைய பண்ணைவிளை கிராமத்தை பற்றி கூறும்போது ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், குருவானவர் ஈசாக்கு போன்ற பல தேவ மனிதர்கள் நற்செய்திபணி செய்த அவ்வூரிலே கிறிஸ்துவின் இரத்தத்தால் இதயக்கறை நீங்கி தூய்மை பெற்று மிஷனெரி தரிசனத்தையும் பெற்றதால் பரிசுத்த பூமி என்று நன்றியோடு நினைவு கூறுவார்.
எமில் ஜெபசிங் அவர்கள் கல்லூரி படிப்பின்போது வாலிபர்கள் மத்தியில் நற்செய்தி பணி செய்து கொண்டு அநேக வாலிபர் ஜெபக்குழுவை உருவாக்கினார்கள்.
கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கிய எமில் ஜெபசிங் அவர்கள் சாயர்புரத்தில் போப் கல்லூரியில் பேராசிரியர் பணி செய்து கொண்டு வாலிபர்கள் மூலம் பல கிராமங்களுக்கு சென்று நற்செய்திபணி செய்து அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆனந்தி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டு கணவனும் மனைவியுமாக குடும்பமாக வாலிபர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் நற்செய்தி பணி செய்ய ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இயேசுவானவர் எமிழ் ஜெபசிங் அவர்களை முழுநேர நற்செய்தி பணி செய்ய அழைத்தார். ஆகவே சாயர்புரம் போப் கல்லூரியில் தன்னுடைய பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு நற்செய்தி பணியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டு அநேக வாலிபர்களை ஆண்டவருக்கு ஆதாயமாக்கினார்.
எமில் ஜெபசிங் அவர்களின் ஜெப ஜீவியம், சாட்சியுள்ள வாழ்க்கை, சகோதர அன்பு, தயாள குணம், ஆகியவற்றால் அநேக வாலிபர்கள் கிறிஸ்துவுக்குள் ஈர்க்கப்பட்டார்கள்.இந்நிலையில் 1959 ஆண்டு டிசம்பர் 26 ம் நாள் சகோ. சாம் கமலேசன், சகோ. தியோடர் வில்லியம்ஸ், Dr. புஷ்பராஜ், சகோ. ஹரிஸ் ஹில்டன் மற்றும் சகோ. எமில் ஜெபசிங் அவர்கள் இணைந்து உறுவாக்கிய நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவின் (FMPB) பொதுச் செயலாளராக சகோ. தியோடர் வில்லியம்ஸ் அவர்களுக்கு பின் 1965 ம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள் FMPB ன் பொதுச் செயலாளராக நற்செய்தி பணியை கிராமம் கிராமமாக சென்று அறிவித்தார்கள். ஆகவே தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட திருச்சபைகளில் பெரிய எழுப்புதல் உண்டாயிற்று. இதனால் அநேக வாலிபர்கள் தங்களை நற்செய்தி பணியாளராக அற்பணித்தார்கள்.
எமில் ஜெபசிங் அவர்களுக்கு ஆண்டவர் பல தாலந்துகளை கொடுத்திருந்தார். கடவுளின் வார்த்தையை பிரசங்கிப்பது, ஜெப ஜீவியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறைமை, நற்செய்திபணிகள் மீதான வைராக்கியம், ஒவ்வொருவரையும் சமமாக நேசிப்பது போன்ற குணநலன்கள் ஒவ்வொருவரையும் கவர்ந்தது.
வேதாகமத்திலிருந்து என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் எமில் ஜெபசிங் அவர்கள் சரியான பதில் கொடுப்பார். அந்த அளவிற்கு வேத ஞானத்தில் சிறந்து விளங்கினார். அநேக வேதாகம விளக்க உரைகளை எழுதினார்கள்.
இயேசு கிறிஸ்துவின் பெயரைகூட கேட்காத மக்களுக்காக எமில் ஜெபசிங் அவர்களின் இதயம் எப்போதும் துடித்தது. அவருடைய பேனா வலிமையானது. உள்ளத்தை உறுக்கும் வலிமை கொண்டது. அநேக பாடல்களை எழுதினார். அது பலருடைய ஆன்மாக்களை வென்றது.
இந்நிலையில் Trans-world என்ற வானொலி மூலம் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கும் இயக்கத்தின் தெற்காசிய இயக்குனராக செயல்பட்டு, வானொலி செய்தி மூலமாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியாவின் பல பகுதிகளிலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் எமில் ஜெபசிங் அவர்களின் நற்செய்திபணி ஒவ்வொருவருடைய இதயத்தையும் பலமாய் அசைத்தது. இந்த ஊழியத்தின் மூலம் இரட்சிக்கப்பட்ட மக்களுக்கு India Believers Fellowship என்ற ஊழியத்தையும் ஆரம்பித்தார். இதன் மூலம் ஆங்காங்கே ஆலயங்கள் கட்டப்பட்டன.
இந்த நிலையில் எனது கொள்கை கிறிஸ்து யார் என்றே தெரியாத மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு சேர்ப்பது; இதை இன்னொருவர் போட்ட அஸ்திபாரத்தின் மேல் கட்டமாட்டேன் என்ற ரோமர் 15 : 20 ன் படி வைராக்கியம் கொண்ட எமில் ஜெபசிங் அவர்கள் 1980 ஆண்டு மே மாதம் 1 நாளில் தூத்துக்குடியில் சில ஜெப வீரர்களோடு சேர்ந்து விஷ்வவாணி என்ற மிஷனெரி இயக்கத்தை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் மிஷனெரிகளை அனுப்ப ஆரம்பித்தார். 1987 இல் 42 மிஷனரிகளோடு இந்த இயக்கம் இந்திய அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.
எமில் ஜெபசிங் அவர்கள் இந்தியாவில் பல மிஷனெரி இயக்கங்கள்,பல நூற்றுக்கணக்கான பிரிவுகளில் நடக்கும் ஊழியங்கள், பல லட்சக்கணக்கான சபைகளை ஒன்றாக இணைக்கும்படி Bless India Mission 2020 என்ற ஐக்கியத்தையும் ஏற்படுத் கடுமையாக செயல்பட்டார்.
அதற்குள் 2000 ம் ஆண்டில் எமில் ஜெபசிங் அவர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் எமில் ஜெபசிங் அவர்கள் பலவீனத்தின் மத்தியிலும் தொடர்ந்து 13 ஆண்டுகள் கர்த்தருக்காய் வைராக்கியமாய் நற்செய்திபணி இந்தியா மட்டுமல்லாமல் வெளி தேசங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய மக்கள் மத்தியிலும் நற்செய்திபணி செய்து அவர்களை கிறிஸ்துவுக்குள் பலப்படுத்தினார்கள்.
இந்நிலையில் 73 ம் வயதில் ஓயாமல் நற்செய்திபணி அறிவிப்பதில் வாழ்க்கையின் இறுதிவரை தொய்வில்லாமல் செய்து, 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் நாள் நித்திய இளைப்பாறுதலுக்காக கர்த்தரின் பாதம் சென்றடைந்தார். 2013 டிசம்பர் 23 ம் நாள் தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Ещё видео!