இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:23)
பொழிப்பு (மு வரதராசன்): பிறப்பு இறப்பு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
மணக்குடவர் உரை: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.
இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
பரிமேலழகர் உரை: இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது.
(தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை: வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் பெருமையே உலகில் விளங்கும்.
பொருள்கோள் வரிஅமைப்பு:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை உலகு பிறங்கிற்று.
பதவுரை: இருமை-இரண்டிரண்டு, இருநிலைகள், இரட்டைத் தன்மைகள்; வகை-கூறுபாடு; தெரிந்து-ஆராய்ந்தறிந்து; ஈண்டு-இங்கு, இப்பிறப்பில்; அறம்-அறச்செயல்கள், நல்வினை; பூண்டார்-மேற்கொண்டவர்; பெருமை-சிறப்பு, உயர்வு; பிறங்கிற்று-விளங்கித் தோன்றுகிறது, உயர்ந்தது; உலகு-உலகம்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை;
பரிதி: புண்ணிய பாவத்தின் வழியறிந்து தன்மத்தின் வழிநின்றார் பெருமையினால்;
காலிங்கர்: கீழ்ச் சொன்ன பரிசே இம்மை மறுமை இரண்டினது குற்றத்தன்மையைத் தெரிந்து மிக்கிருந்துள்ள அறம் பயனாகிய வீட்டின்பத்தை மேவியுள்ளாரது பெருந்தன்மையையே; [பரிசே - தன்மை]
பரிமேலழகர்: பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே;
பரிமேலழகர் குறிப்புரை: தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது.
'பிறப்பு-வீடு என்ற இரண்டினது கூறுபாட்டை ஆராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை' என மணக்குடவரும் பரிமேலழகரும், 'புண்ணியம்-பாவம் வழி அறிந்து தன்மத்தின் நெறி நின்றார் பெருமை' எனப் பரிதியும் இம்மை-மறுமை என்ற இரண்டினது தன்மையைத் தெரிந்து வீட்டின்பப் பெருந்தன்மையை என்று காலிங்கரும் இப்பகுதிக்கு உரை செய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து இங்குத் துறவு பூண்ட நீத்தாரின் பெருமை', 'பிறப்பதும் இறப்பதும் ஏன் என்பதையும் அதை ஒட்டிய மற்ற விஷயங்களையும் சிந்தித்து ஆராய்ந்து அறிந்து, அந்த அறிவினால் தர்மம் தவறாது வாழ்ந்த நீத்தார்களுடைய சரித்திரப் பெருமையினால்தான்', 'உலகியல், வீட்டுநெறி யென்னும் இரண்டின் கூறுபாட்டையும் அறிந்து இப்பிறப்பிலேயே துறவறத்தை மேற்கொண்டாரது பெருமையானது (துறவறம் நன்றென்று காணல் எளிது மேற்கோள்ளுதல் அரிது.ஆதலின் இவ்வாறு கூறினார்)', 'இன்பம் துன்பம் என்னும் இிரண்டினது தன்மைகளை அறிந்து இவ்வுலகில் துறவற நெறியை மேற்கொண்டார் பெருமை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இருவேறு நிலைகளை ஆராய்ந்து அறத்தைக் கடமையாக ஏற்றுக் கொண்டவர்கள் பெருமை என்பது இப்பகுதியின் பொருள்.
பிறங்கிற்று உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தில் மிக்கது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.
பரிதி: உலகம் விளங்கும் என்றவாறு.
காலிங்கர்: மிகுத்துக் கூறியது இவ்வுலகம் என்றவாறு.
பரிமேலழகர்: உலகின்கண் உயர்ந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.
பிறங்கிற்று உலகு என்பதற்கு உலகத்தில் மிக்கது என்று மணக்குடவரும் உலகம் விளங்கும் என்று பரிதியும் மிகுத்துக் கூறியது இவ்வுலகம் என்று காலிங்கரும் உலகின்கண் உயர்ந்தது என்று பரிமேலழகரும் உரை கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுலகில் விளங்கித் தோன்றும்', 'உலகம் பிரகாசிக்கிறது', 'உலகத்திலே எவற்றினும் உயர்ந்து விளங்கும் இயல்பிற்று', 'உலகின்கண் உயர்ந்தது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
உலகில் விளங்கித் தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:
இருவேறு நிலைகளை ஆராய்ந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமையால் உலகம் விளங்கித் தோன்றுகிறது என்பது பாடல் கருத்து.
'ஈண்டு அறம்பூண்டார்' குறிப்பது என்ன?
தன்னலம் நீத்தாரின் நற்செயற்பாடுகளால் இந்த உலகம் ஒளிர்கின்றது.
இருவேறு கூறுபாடுகளை ஆராய்ந்து கூடிவாழும் வாழ்க்கையில் தந்நலம் நீத்து அறச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பெருமை இவ்வுலகில் விளங்கித் தோன்றும்.
இருமை வகை தெரிந்து என்றதற்கு இரண்டு கூறுபாடுகளை ஆராய்ந்து என்பது பொருள். இரண்டு கூறுபாடுகள் என்பதை இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகள் என்று விளக்குவர். உலக இயற்கையின் இருவேறு எதிரிடைத் தன்மைகளாக உள்ள இரண்டிரண்டானவைகளையே குறள் குறிக்கிறது என்பர் சிலர். பிறப்பு - வீடு, பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்பங்கள் - இன்பங்கள், நன்மை - தீமை, அறிவு - அறியாமை, உயர்வு - தாழ்வு, அறம் - மறம், ஆக்கம் - கேடு, தோற்றம் - அழிவு, உடல் - உயிர், நிலைப்பது -அழிவது, மெய்-பொய், உலகியல்-வீட்டுநெறி, இல்லறம் - துறவறம்
Ещё видео!