1964ஆம் ஆண்டு T. R. ராமண்ணா இயக்கத்தில் T. M. சௌந்தரராஜன் நடித்து வெளிவந்த 'அருணகிரிநாதர்'
திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா '. பாடியவர்
T.M.சௌந்தரராஜன் . அருணகிரியாரின் கந்தர் அந்தாதி 54ஆவது பாடல். முழுதும் 'த'கர வரிசைச் சொற்களே கொண்ட கவி. இப்பாடலுக்கு பொருள் கூற இயலாமல் வில்லிபுத்தூரார் வாதத்தில்தோற்றவர் காதை அறுக்கும் பழக்கத்தை விடுத்தார் என்று கூறுவர். கந்தர் அந்தாதி முழுதும் 'பலபொருள் ஒருமொழி' என்னுமாறு ஒரே வார்த்தைப் பிரித்துப் பொருள் கொள்ள பல பொருள்தருமாறு அமைந்த கவிகளால் ஆன அந்தாதி. இதே வரிசைச் சொற்களைக்கொண்டு கண்ணதாசன் 'வானம்பாடி' படத்தில் பாடல் அமைத்திருந்தார். பாடலுடன் பதவுரையும் கீழே தந்திருக்கிறேன். படத்தின் இசையை G.ராமநாதனும் அவரைத் தொடர்ந்து T.R.பாப்பாவும் அமைத்தனர்.
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ......
பதவுரை:
திதத்த ததித்த ... திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை,
திதி ... தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை ... உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத ... மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி ... புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி ... பாம்பாகிய ஆதிசேஷனின்,
தா ... முதுகாகிய இடத்தையும்,
தித ... இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்)
தத்து ... அலை வீசுகின்ற,
அத்தி ... சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு),
ததி ... ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே ... மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து ... அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்),
துதித்து ... போற்றி வணங்குகின்ற,
இதத்து ... பேரின்ப சொரூபியாகிய,
ஆதி ... மூலப்பொருளே,
தத்தத்து ... தந்தங்களை உடைய,
அத்தி ... யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை ... கிளி போன்ற தேவயானையின்,
தாத ... தாசனே,
திதே துதை ... பல தீமைகள் நிறைந்ததும்,
தாது ... ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி ... மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து ... பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி ... எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு),
தீ ... அக்னியினால்,
தீ ... தகிக்கப்படும்,
திதி ... அந்த அந்திம நாளில்,
துதி தீ ... உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே ... உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
Ещё видео!