07.043 திருமுதுகுன்றம் | நஞ்சி இடை இன்று நாளை என்று | சுந்தரர் தேவாரம் | கரூர் சுவாமிநாதன்
இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
(கந்தபுராணம் - வழிநடைப் படலம்)
ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.
காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால் அவை கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது ஐதீகம்.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பழமலைநாதர், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரிய நாய்கி, ஸ்ரீ விருத்தாம்பிகை
சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள்செய்தார்.
தம்பிரான் தோழர் திருக்கூடலையாற்றூர்ப் பெருமானைத் தொழுது திருமுதுகுன்றம் அடைந்து வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம் இறைவரிடத்துத் தமக்குள்ள உரிமையால் "அடியவர்கட்கு நீர் இப்பொழுதே அருள் செய்யவேண்டும்" என்று வலியுறுத்தி அருளிச்செய்தது.
00:11 நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
துஞ்சி இட்டால் பின்னைச் செய்வது என் அடிகேள் சொலீர்
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ பணியீர் அருள்
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே. ..... (01)
02:39 ஏரிக் கனகக் கமலம் மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோங்கொலோ
வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு வருந்திப் போய்
மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே. ..... (02)
04:09 தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்
பண்டகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்டகை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே. ..... (03)
05:35 இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்
விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்
அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே. ..... (04)
07:02 ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும்
பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம்
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே. ..... (05)
08:29 இழை வளர் நுண்ணிடை மங்கையொடு இடுகாட்டு இடைக்
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள்
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே. ..... (06)
09:42 சென்றில் இடைச் செடி நாய் குரைக்க சேடிச்சிகள்
மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே
குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள குறத்திகள்
முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே. ..... (07)
11:07 அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம் தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர் முதுகுன்றரே. ..... (08)
13:21 செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டுமின் சில்பலிக்கு என்று அகம் கடை நிற்பதே
பட்டி வெள்ளேறு உகந்து ஏறுவீர் பரிசு என்கொலோ
முட்டி அடிதொழ நின்ற சீர் முதுகுன்றரே. ..... (09)
14:41 எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்
பத்தியினால் இடுவார் இடைப்பலி கொண்மினோ
எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலஞ்செயும் முதுகுன்றரே. ..... (10)
16:04 முத்தி முத்தாறு வலஞ்செயும் முதுகுன்றரைப்
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்றிவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார்
எத்தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே. ..... (11)
பதிகப் பலன் : முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவ ஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும்.
ஆலய முகவரி : அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில், விருத்தாசலம், விருத்தாசலம் அஞ்சல், கடலூர் மாவட்டம், PIN - 606 001.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"
Ещё видео!